ADDED : மே 23, 2010 12:34 AM
மங்களூரு : ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்திற்கு உள்ளான, மங்களூரு பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தில், நேற்று மதியத்திற்கு மேல் விமான சேவைகள் துவங்கின.
துபாயிலிருந்து மங்களூரு வந்த ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை மங்களூரு பாஜ்பே சர்வதேச விமான நிலையத்தில் விபத்திற்குள்ளானது. இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது.
ஆனாலும், மதியத்திற்கு மேல் விமான சேவைகள் துவங்கின. பெங்களூரில் இருந்து 25 பயணிகளுடன் வந்த கிங்பிஷர் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று மதியம் 1.50 மணிக்கு தரையிறங்கியது. இந்த விமானத்தில் பயணித்தவர்களில் பெரும்பாலானவர்கள் சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அலுவலக அதிகாரிகள். விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தைப் பார்ப்பதற்காக அவர்கள் வந்தனர்.
அதேபோல், பெங்களூரு மற்றும் மும்பைக்கு தலா இரண்டு விமானங்களை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் இயக்கியது. இருந்தாலும், போயிங் விமான சேவை ஒன்றை ரத்து செய்தது. இதுமட்டுமின்றி, வேறு சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.